பிரபஞ்சம் என்ற வார்த்தையை நம்மில் பலர் கேட்டிருப்போம் கடவுள் என்பதை நம்பாத நாத்திகர்கள் கூட பிரபஞ்ச இருப்பு என்று ஒன்று உள்ளதை ஒத்துக் கொள்கின்றனர்.
கடவுள் கருணைமிக்கவர் என்று ஆத்திகர்கள் அனைவரும் நம்புகின்றனர். எனினும் தவறு செய்தால் கடவுள் நம்மை தண்டிப்பார் என்ற அச்சமும் அனைவர் மனதிலும் உள்ளது.
கடவுளோ, பிரபஞ்ச சக்தியோ, ஆதி இருப்போ ஏதோ ஒரு ஆற்றலானது இந்த பிரபஞ்சம் மொத்தத்தையும் பரிபாலிக்கிறது என்று அவரவர். புரிதலுக்கேற்ப பெயரிட்டு உணர்ந்து கொள்கின்றனர்.
இத்தைகைய ஆற்றலானது நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பதே பெரும்பாலும் நம்முடைய நம்பிக்கையாக உள்ளது.
ஆனால் ஆன்மிகத்தை பொருத்தவரை நமது யதார்த்தத்தை நாமே தான் உருவாக்குகிறோம் என்பதே உண்மையாகும்.
நமது சுய சுதந்திரம் மூலம் நம்முடைய வாழ்க்கையை வடிவமைக்கூடிய திறன் நமக்கு உள்ளது.
மனதானது என்றும் கடந்த காலம் மற்றும் எதிர் காலத்திலேயே வாழும் தன்மை கொண்டது. மனது உருவாகும் கடந்த காலத்தில் வாழ விருப்பம் இல்லாவிடில் நாம் நிகழ் காலத்தில் வாழ கற்க வேண்டும்.
நிகழ்காலத்தில் நாம் வாழும் பொழுது தான் பிரபஞ்சத்தின் நிச்சயமற்ற தன்மை புரிய வரும். நிகழ்காலம் என்றும் பாதுகாப்பற்றது .
அடுத்த நொடி என்ன நிகழும் என்று அறியா தன்மையில் எது நமக்கு பாதுகாப்பளிக்க முடியும்.
எனினும் இந்த பாதுகாப்பற்ற தன்மை தான் நம்மை எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருக்க வைக்கிறது.
பாதுகாப்பு என்று நாம் நினைப்பது நம்மை உண்மையில் கட்டுபடுத்தும் அம்சமாகவே இருக்கிறது.
வாழ்க்கையை எவ்வளவு பாதுகாப்பானதாக ஆக்குகிறீர்களோ அவ்வளவு அதிகமாக சுவாரசியம் அற்று போய் விடுகிறது.
பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமானது மிகவும் விழிப்புணர்வற்ற நிலையையே கொண்டு வரும்.
உதாரணமாக பொழுது போக்கு சாதனங்களில் கூட நாம் விளையாடும் போது பாதுகாப்பு என்று கூறி நம்மை நகர விடாமல் கட்டியே வைக்கின்றனர்.
வாழ்க்கையிலும் பாதுகாப்பானது நம்மை முன்னேற அனுமதிப்பதில்லை. இயற்கையில் எந்த உயிரினமும் பாதுகாப்பை தேடுவதில்லை. எந்தக் காப்பீடு திட்டத்தையும் பின்பற்றுவதில்லை.
ஆனால் நாம் பாதுகாப்பை தேடுகிறோம் அதற்கான உண்மைக் காரணம் என்னவென்றால் நாம் பிரபஞ்சத்தின் மீது முதலில் நம்பிக்கை வைக்க தவறுகிறோம்.
இரண்டாவது நாம் நிகழ்காலத்தில் வாழ்வதில்லை. கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டு எதிர்கால திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாம் பாதுகாப்பு என்ற கவசத்தை ஏதோ ஒரு வழியில் தேடுகிறோம்.
உண்மையில் பிரபஞ்சத்தின் இயக்கம் நிகழ் கணத்தில் மட்டுமே நடைபெறுகிறது. இதை முழுமையாக புரிந்துக் கொள்வது ஆன்மிகத்தில் மட்டுமே சாத்தியம்.
ஆன்மிகத்தின் இணை அங்கமான தியானமானது நமது புரிதலை அதிகரிக்கிறது.
நாம் வாழ்க்கையில் எதையும் முன்னேற்பாடாக செய்தாலும் அந்தந்த நேரத்தில் நடப்பதை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாத நிலையில் தான் உள்ளோம்.
எதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை. அனைத்தும் பிரபஞ்ச திட்டத்தின்படியே இயங்குகிறது என்ற புரிதல் நம்முள் தோன்றி விட்டால்
அச்சத்தினால் உருவாகும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமானது நம்மை விட்டு நீங்குகிறது.
வாழ்க்கை பாதுகாப்பற்றது என்ற உணர்வோடு அதன் அதி அற்புதமான நிகழ்வுகளை ரசிக்கும் மனநிலையையும் தியானம் நம்முள் கொண்டு வரும்.
Comments