உடலானது தன்னிச்சையான ஞானம் உடையது. உடல் தனது ஐம்புலன்களின் தூண்டுதலினால் பல்வேறு விருப்பங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு அதை முழுமையாக அனுபவிக்கிறது. மனம் என்பது மனிதன் வளரும்போது அவனது அனுபவங்கள் மற்றும் நினைவுகளால் உருவாக்கப்படுகிறது.பொதுவாக இந்தப் பதிவுகளில் கடந்த காலத்தின் பாடங்கள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகளே இருக்கும்.நிகழ்கால நிகழ்வுகளில் மனமானது இருப்பதில்லை. மனதின் அடுத்த நிலையான அறிவு நாம் விரும்பி கற்கும் தகவல்கள் மற்றும் கருத்துக்களால் உருவாகிறது என்றாலும் நமது சொந்த சிந்தனைகளினாலும் இந்த அறிவு வளர்ச்சி அடைகிறது. இவைகள் நம் சொந்த அனுபவமாக மாறும் பொழுது ஞானம் உருவாகிறது. இதில் சாட்சிபாவம் உருவாவது எங்கு?
பிரபஞ்சத்தின் துகள் என நாம் நம்மை உணரக் கூடியது இந்த சாட்சி பாவத்தில் தான். உடலின் செய்கைகளையும் , மனதின் மயக்கங்களையும், அறிவின் அகங்காரத்தையும் , ஞானத்தின் புரிதலையும் கவனிப்பது யார்?. பிரபஞ்ச பெருவெளி அனைத்தையும் சாட்சிபாவமாகவே கவனிக்கிறது் எதிலும் தலையிடுவதில்லை.பின் மனிதன் எப்படி வேண்டுமானாலும் பொறுப்பற்று இருக்கலாமா? அங்குதான் இறை சக்தியின் அற்புதமான பிரஞ்ச சட்டம் வெளிப்படுகிறது. பிரபஞ்சத்தின் மொத்த சத்தியமும் இந்த சட்டத்தால் கட்டுண்டு இருக்கிறது. இதுவே காரண காரிய விதியாகும்.
இங்கு எந்த செயல் செய்வதற்கும் நமக்கு சுதந்திரம் இருந்தாலும் அதன் விளைவுகளில் தலையிட நமக்கு அனுமதியில்லை. எளிதாக சொல்வதென்றால் ஒரு காலை உயர்த்த அனுமதி உண்டு, மறுகாலை சேர்த்து உயர்த்துவது இயலாதது. விளைவுகளை மாற்ற வேண்டுமானால் நம்முடைய செயல்களை மாற்றினால் மட்டுமே முடியும். இந்த அற்புத விதியை பரிபூரணமாக உணரவே தியானம் தேவைப்படுகிறது. தியானத்தின் மூலம் நாம் நிகழ் கணத்தில் வாழ கற்கிறோம்.செய்யும் செயல்களில் விழிப்புணர்வு ஏற்படுகிறது. கர்மா என்றழைக்கப்படும் விளைவுகளில் இருந்து எளிதாக விடுபடலாம்.
மேலும் பிரபஞ்ச சாட்சி பாவம் உள்ளிலும் செயல்படுவதை உணரலாம்.நம்முடைய செயல்களை சாட்சியாக கவனிக்கும்பொழுது சுய ஒழுக்கம் உருவாகிறது. பிற பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்தும் மிகச் சரியாகவே நிகழ்கிறது என்ற புரிதலின் காரணமாக நாம் அவற்றில் தலையிடுவதும் தவிர்க்கப்படுகிறது. சாட்சி பாவம் மற்றும் தலையிடாமை இரண்டும் தியானத்தின் மூலமே சாத்தியமாகும்
Comments