ஓஷோவின் அருமையான விளக்கப்பதிவு
நாம் பெரும்பாலும் எந்த வேலை செய்தாலும் உள்ளுக்குள் ஒரு பதட்டத்தை உணர்கிறோம். அந்த பதட்டம் உருவாவது எதனால் என்று சிந்தித்து இருக்கிறோமா?
நாம் செய்யும் செயல்களில் திருப்தி இருக்குமானால் நம்முள் பதட்டம் தோன்றுவதில்லை. மேலும் நமது செயல்களில் மற்றவரின் அங்கீகாரத்தை எதிர் நோக்கினாலும் பதட்டம் ஆரம்பிக்கிறது.
நாம் நம்முடைய திறன்களை தாண்டி சிந்தித்தாலும் பதட்டம் ஏற்படுகிறது. நாம் எப்படி உள்ளோமோ அதை ஏற்பதில் தயக்கம் காட்டுகிறோம்.
நாம் என்னவாக இருக்கிறோமோ அதில் திருப்தியடையாமல் நாம் என்னவாக இல்லையோ அதற்காக ஏங்குகிறோம்.
இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் நடக்கும் போரட்டத்தில் தான் நாம் சிக்கித் தவிக்கிறோம்.
இருக்கும் நிலையில் யாருக்கும் நிம்மதி இல்லை. நமது நிம்மதிக்கான சாவியை இன்னொருவரிடம் நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்.
பதட்டம் என்பது தானாக உருவாவதில்லை. அதை நாமே தான் வரவழைத்துக் கொள்கிறோம் .
நீங்கள் எதுவாக ஆசைப்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் பணக்காரராகவோ, புகழ் பெறவோ, அதிகாரத்தைப் பெறவோ விரும்பலாம்.
அல்லது இவையெல்லாவற்றையும் விரும்பாமல் சுதந்திரமானவராகவோ, விடுதலையை நாடுபவராகவோ, தெய்வீகத் தன்மையைப் பெறவோ, இறவாத்தன்மை அடைந்து மோட்சம் பெறவோ விரும்பலாம்.
எதை அடைய விரும்பும் போதும் நம்முள் பதட்டம் தோன்றுகிறது.
எவ்வளவுதூ,ம் இது நடைபெற முடியாது என்று நம்புகிறோமோ அந்த அளவிற்கு பதட்டம் அதிகரிக்கிறது.
உண்மை நிலைக்கும் நீங்கள் விரும்பும் நிலைக்கும் எவ்வளவு தொலை தூரம் உள்ளதோ அதுவே உங்கள் பதட்டத்திற்கான அளவுகோல்.
எனவே தான் சாதரணமாக எதையும் எதிர்காலத்தில் அடைந்தே தீர வேண்டும் என்று நினைக்காமல் வாழ்பவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.
யதார்த்த நிலைக்கும் ஆசைக்குமான இடைவெளி குறையுமென்றால் நீங்கள் திருப்தி நிலையை நெருங்குவீர்கள்.
நீங்கள் எதற்கும் பதற்றப்படுவதில்லை. உங்கள் மனமானது அந்த் தருணங்களின் அழகிலேயே வாழத் தொடங்குகிறது.
அந்த இடைவெளியானது பல படிமங்களில் இருக்கின்றன.அந்த ஏக்கமானது உடல் ரீதியாக இருந்தால் பதற்றமும் உடல் சார்ந்தே இருக்கும்.
உதாரணமாக நீங்கள் இருப்பதை விட அழகாக விரும்பினால் உடல் பதற்றமடைய தொடங்கி அது மற்ற படிமங்களுக்கு பரவுகிறது.
நீங்கள் உளம் சார்ந்த அதிகாரத்திற்கு ஏங்கினால் பதற்றமும் உளம் சார்ந்த அளவிலேயே இருக்கும்.
எனினும் நீரில் கல் எறிவது போல அதன் மூலம் ஏற்படும் அதிர்வுகள் முடிவில்லாமல் பரவும்.
உண்மையான ஆதார ஊற்று ஏக்கநிலை மட்டுமே. நம்மை முழுமையாக ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டால் பதற்றமில்லை.
பிரபஞ்ச இருப்பில் பதற்றம் என்பதே இல்லை. ஆனால் தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்ட ஒரு மனிதரைக் கண்டு பிடிப்பது தான் ஒரே வியப்பான விஷயம்.
பதற்றம் எதிர்காலத்தை சேர்ந்தது. கற்பனையால் உருவானது. உங்கள் கற்பனை கூட நிகழ்காலத்தில் இருந்தால் உங்கள் இருப்பே கவிதையாக மாறும்.
நிகழ்காலத்தில் வாழ்வது என்பது பதற்றத்திற்கு அப்பாற்பட்டது. நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொடுப்பதே தியானம் ஆகும்.
தியானம் செய்யும்பொழுது வருவதை ஏற்றுக்கொள்ளும் தன்மையும் ,எந்த எதிர்பார்ப்பும் நம்மிடமோஅல்லது பிறரிடமோ தோன்றாத நிலையும் உருவாகும்.
எதிர்பார்ப்பினால் வரும் ஏமாற்றம் இல்லாத்தால் நம்முள் பதற்றம் என்பது வருவதற்கான வாய்ப்பே இருப்பதில்லை.
Comments