நாம் பௌதிக வாழ்வில் அனைத்து செயல்களிலும் பெரும்பாலும் அதிருப்தி அடைந்த பிறகே ஆன்மிகத்தை நாடுகிறோம்.
இந்த உலகாயத தேடுதல்களில் இருந்து விடுபட்டாலும் ஆன்மிக தேடுதல்களை தொடர்கிறோம்.
அந்த தேடுதல்களுக்காக நாம் பல ஆன்மிக வகுப்புகளுக்கு செல்கிறோம் .பல குருமார்களைத் தேடிச் செல்கிறோம்.
இதன் அடிப்படை என்னவென்றால், நாம் நம்முடைய இயல்பான நிலையை புரிந்துக் கொள்ளாமல் இல்லாத ஒன்றை உருவாக்க நினைப்பதே இந்த தேடுதல்களுக்கான அடிப்படை.
யாருக்கும் தன்னை முழுவதுமாக ஏற்றுக் கொள்வதில் தயக்கம் உள்ளது. தான் முழுமையானவன் அல்ல அல்லது சாதாரணமானவன் என்றே நினைக்கின்றனர்.
உண்மையில் பிரபஞ்சத்தின் கருணை எவ்வாறென்றால் நம் ஒவ்வொருவரையும் தனித்துவமானவர்களாகத் தான் அது படைக்கிறது.
நாம் இயல்பாகவே அதாரணமானவர்கள் தான். ஏனென்றால் ஒரு நாளும் ஒரே வகையிலான உயிரிருப்புகளை பிரபஞ்சம் உருவாக்குவதில்லை.
நாம் தான் அடுத்தவர்களைப் பார்த்து இவரைப் போல மாற வேண்டும் என நினைக்கிறோம். நாம் யாரையும் பார்த்து ஏக்கம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
நம்மைப் போல ஒருவர் இதற்கு முன்னும் உருவாகவில்லை. இனியும் உருவாகப் போவதில்லை.
நம்முடைய முயற்சி தவறல்ல. எனினும் முயற்சியின் காரணம் தவறாக உள்ளது.
நாம் சிறப்பாக மாற வேண்டும் என முயற்சிக்கும் போதே நாம் சிறந்தவர்களல்ல என்பதை முடிவு செய்துக் கொண்டு விடுகிறோம்.
இந்த தவறான புரிதலே அதிகமான குழப்பங்களுக்கு காரணமாக உள்ளது. இதன் அடிப்படையை புரிந்துக் கொண்டால் பேரின்ப நிலையை அனைவரும் அடைவது சாத்தியமே.
இதற்காக நாம் செய்ய வேண்டியது ஒன்று தான் . யாரையும் நம்முடன் ஒப்பிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
அதன்பின்னரே நம்முடைய தனித்தன்மை என்ன என்பதை புரிந்துக் கொள்ளும் ஆற்றலானது நமக்கு கிடைக்கும்.
இத்தனித்தன்மை மட்டுமே நமது வாழ்வில் நம்மை வழிநடத்தும் உண்மையான குருவாகும்.
ஒப்பீடுகள் நிற்கும் போதே நாம் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு செல்கிறோம்.
கடவுள் ஒரு போதும் தனித்துவம் இல்லாத ஆன்மாக்களை படைப்பதில்லை. யாருடைய கைரேகையும் ஒரேப் போல இருப்பதில்லை.
இரட்டைக் குழந்தைகள் கூட ஒரேப் போல இருப்பதில்லை. நம்முடைய தியான சாதனையால் மட்டுமே நம்மை சிறப்புடையவனாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம் .
ஏற்கனவே நாம் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள் தான் என்பதை புரிந்துக் கொள்ளும் ஆற்றலை தியானம் மட்டுமே கொடுக்க முடியும்.
நம்மை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பொழுது மட்டுமே அடுத்தவரையும் அவரவர் இயல்பிலேயே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை பெறுகிறோம்.
பிரபஞ்சம் நம்மை நமது இயல்புத் தன்மையிலே தான் ஏற்றுக் கொள்கிறது. இந்த ஞானமானது தியானம் , சத் சங்கம் மற்றும் புத்தக வாசிப்பின் மூலம் கிடைக்கிறது.
பிரபஞ்ச இயக்கங்கள் குறித்தும் விதிகள் குறித்தும் கூடுதலான விஷயங்களை நாம் இவைகள் மூலம் பெறலாம்.
ஆனாலும் இவையெல்லாம் அறிவு நிலைப் புரிதல்களாகவே உள்ளன.
ஆன்ம புரிதலாகும் பொழுது மட்டுமே பிரபஞ்ச இயக்கத்தின் ஒழுங்கை புரிந்துக் கொண்டு அதன் அலைவரிசையில் ஒத்திசைவோடு செல்லும் வழியை தேர்ந்தெடுக்கும் ஞானத்தை பெறுகிறோம்.
உண்மையான ஞானம் என்பது பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை மட்டுமே நம்மால் புரிந்துக் கொள்ள முடியும் முழுவதையும் அல்ல என்பதே
Comments