நம் வாழ்க்கையில் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைககளில் ஒன்றாக இருப்பது இந்த தியாகம் என்ற வார்த்தை. உலகில் பெரிதும் தவறாக புரிந்துக் கொள்ளப்படும் வார்த்தைகள் பல உண்டு என்றால் அதில் இந்த வார்த்தையும் அடங்கும். பலர் நான் என் குடும்பத்திற்காக என் நேரத்தையும், வாழ்க்கையையும் ,தியாகம் செய்தேன் என்பார்கள். சிலர் என் படிப்பை தியாகம் செய்தேன் என்றும், சிலர் என் இளமையை தியாகம் செய்தேன் என்றும், வேறு சிலர் என் திறமைகளைத் தியாகம் செய்தேன் என்றும் கூறுவார்கள். இதைப் புரிந்துக் கொள்வதற்கு தியாகம் என்றால் என்ன என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதை அறிவது அவசியம்.
தியாகம் என்று நாம் நினைப்பது ஏதோ ஒன்றை நாம் இழந்து விட்டோம் என்பதாகவே புரிந்துக் கொள்ளப்படுகிறது.உண்மையில் பிரபஞ்சத்தில் எதுவும் இழக்கப்படுவதில்லை. கொடுத்தலும் பெறுதலுமே நடைபெறுகிறது. நம் புரிதலின் அளவே குறைவாக உள்ளது. இதற்கான விளக்கத்தை புத்தரின் வாழ்வின் ஒரு நிகழ்வில் மூலம் நாம் நன்றாக புரிந்துக் கொள்ள முடியும். புத்தர் குறித்து அனைவருக்கும் தெரிந்த விஷயம் அவர் தனது தேடுதலுக்காக ராஜ்ஜியத்தையே துறந்தார் என்பது. அவர் துறவியான பின் அவரிடம் நீங்கள் எதையெல்லாம் இழந்தீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது. அவர் நான் எதையும் இழக்கவில்லை மாறாக , உண்மை, இறப்பில்லை என்ற புரிதல், துன்பத்திற்கான காரணம், நான் யார் என்ற சத்தியம், பிரபஞ்ச நிகழ்வுகளின் ஒழுங்கு , கர்மாவில் இருந்து விடுபடும் வழி எனப் பலவற்றை தியானத்தின் மூலம் பெற்றுக் கொண்டேன் என்றார்
சிலருக்கு விலையுயர்ந்த கற்களாக தோன்றுவது சிலருக்கு வெறும் கூழாங்கற்களாக தோன்றுகிறது. எனவே அவர்கள் எதையும் தியாகம் செய்ததாக உணர்வதில்லை..நாமும் வாழ்வில் இழந்ததை மட்டுமே பார்க்காமல் அவற்றை நாம் இழந்ததாக கருதும் நேரத்தில் நாம் என்ன பெற்றொம் எனபதைக் குறித்து சிந்திக்க வேண்டும் . ஏனெனில் இப்பிரபஞ்சத்தில் ஏற்றத் தாழ்வு , கூடுதல் குறைச்சல் என எதுவும் விட்டு விடப் படுவதில்லை. அனைத்தும் சமநிலை தன்மையிலேயே தான் இருக்கும்படி ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது. எனவே நாம் எதையாவது இழந்ததாக நினைக்கும் தருணங்களில் எவற்றை நாம் பெற்றோம் என்பதை புரிந்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு நமக்கு தேவைப்படுகிறது.
தியானம் செய்வது அந்த விழிப்புணர்வை நம்முள் உண்டாக்கும். யோசித்துப்பார்த்தால் நாம் புதிய அனுபவங்களை, நண்பர்களை, திறமைகளை, வாய்ப்புகளை, உறவுகளை, புரிதல்களை என பலவற்றை பெற்றிருப்போம். ஆனால் நாம் எப்போதும் கடந்த காலத்தை குறித்தே சிந்தித்து இழந்தவைகளை மட்டுமே கணக்கெடுத்து வருத்தம் கொள்கிறோம் . உண்மையில் பிரபஞ்ச இயக்கம் நிகழ் கணத்தில் மட்டுமே செயல்படுகிறது. இதைப் புரிந்துக் கொண்டு மன மகிழ்ச்சி பெற்று வாழ தியானம் கை கொடுக்கும். பின்னர் உலகில் தியாகத்தினால் இழப்பது என்பதே இல்லை என்ற சத்தியத்தை புரிந்துக்கொள்வோம்.
Comentários