நிசப்தம்
சப்தம் என்பதை அனைவரும் அறிவோம். நம்மைச் சுற்றி எப்பொழுதும் பல சப்தங்களை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நாமும் தேவையில்லாமல் பல விஷயங்களை பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.
நிசப்தம் என்பது முதலில் நாம் பேசுவதை நிறுத்துவதாகும். வாய் மூடி மௌனமாக இருப்பது குறித்து நமது முன்னோர்கள் பல விரதங்களாக கூறியுள்ளனர். எனினும் இது மௌனத்தின் முதல் படியே.
நிச்சலனம்
மௌனத்தின் முதல் நிலையான வாய்மூடி மௌனமாக இருப்பதற்கு அடுத்த நிலையே நிச்சலனம் ஆகும். சலனம் என்றால் அசைவுள்ளது. நிலையற்ற தன்மையில் இருப்பது.
நம்முள் எப்பொழுதும் அசைவுள்ளதாக உள்ளது மனமே. வாய் மூடி அமைதியாக இருப்பது கூட சற்று எளிதானதே. ஆனால் மனதை சலனமில்லாமல் வைப்பது என்பதற்கு நாம் சற்று மெனக்கெட வேண்டும்.
மனதின் அசைவை சற்றேனும் ஒரு நிலைப்படுத்த தியானம் நமக்கு துணைப் புரியும். ஆனாபானசதி தியானமான புத்தரின் தியான முறையில் மனதின் செயல்பாடு அறவே நிறுத்தப் படுகிறது.
நிக்கலம்
மனதின் செயல்பாடுகளை இரண்டாம் நிலையில் குறைத்தாலும் பௌதிக வாழ்வில் நாம் செயல்படும் சமயங்களில் மனமானது பல விதங்களில் களங்கமடைய வாய்ப்புள்ளது.
நிக்கலம் என்பது மனதின் செயல்பாடுகள் இருப்பினும் அவற்றில் களங்கமற்ற நிலையில் இருப்பது. மனதின் அழுக்குகளாக உருவாகும் மனநிலைகளை தவிர்க்க வேண்டும்.
பொறாமை, கோபம், அசூயை, பெருமை, கவலை, அகந்தை மற்றும் புறம் பேசுதல் போன்ற தேவையில்லாத பல குணங்களே மனதின் அழுக்குகளாக மாறுகின்றன. அவற்றை நீக்குதலே நிக்கலம் ஆகும்.
நிராமயம்
எதையும் மையத்தில் வைத்து சார்ந்திராமல் இருப்பது நிராமயம் எனக் கொள்ளலாம். சிவ மயம், இன்ப மயம், ஆத்ம மயம், கோப மயம் என எந்த உணர்வுகளாலும் ஆக்ரமிக்கப் படாமல் இருப்பது.
பக்தி மற்றும் ஆத்மத் தேடுதலின் தீவிரம் கூட நம்மை அதன் மேல் ஒரு சார்ந்திருத்தலை ஏற்படுத்துகிறது. புத்தரும் தன் ஞானத்தை தேடி அலைந்து இனி எதுவும் செய்வதற்கு இல்லை என்று அனைத்தையும் கை விட்ட நிலையிலேயே ஞானம் அடைந்தார்.
நிர் மலம்
ஆணவம் ,கன்மம், மாயை போன்ற மும்மலங்களும் இல்லாத நிலையே நிர்மலமாகும். மனதின் மலங்களாக அறியப்படுபவை இவை மூன்றும் தான்.
ஆணவம் என்பது நான் என்ற அகந்தையை வளர்க்கிறது. கன்மம் என்பது அந்த அகந்தையின மூலமாக நாம் செய்யும் செயல்களைக் குறிக்கிறது. மாயை என்பது அச்செயல்களின் பயனற்ற தன்மையே ்புரிந்துக் கொள்ளாமல் செயல்படுவதாகும்.
நிஷ்காம்யம்
உலகில் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளில் இருந்து விலகி இருத்தல் . நம்முடைய பௌதிக வாழ்வில் நாம் செயல்படாமல் இருக்க இயல்வதில்லை.
நாம் செயல்படும்போது அந்தச் செயல்களில் பந்தப்படாமல் இருப்பதும் ஒரு மௌன நிலையே. கீதையில் கூறியுள்ளதுப் போல கடமையைச் செய் பலனை எதிர்பார்பார்க்காமல் இருப்பது செயல்களின் மௌனமாகிறது.
அந்த செயல்களால் கிடைக்கக் கூடிய இன்பதுன்பத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருத்தலே நிஷ்காம்யமாகும்.
நிர்குணம்
மூன்று குணங்களாகிய தாமச குணம் இரஜோகுணம் மற்றும் சாத்விக குணங்கள் அனைத்து ஆன்மாக்களும் கடக்கும் குண நிலைகளாகும்.
இந்த குணநிலைகளையும் தாண்டும் இறுதி நிலை யே நிர்கிண நிலையாகும்.
Comentarios