உடல் ஆன்மாவின் தேவை. ஆன்மா உடலுக்கு தேவை .உடல் இல்லாமல் ஆன்மா இல்லை. ஆன்மா இல்லாமல் உடல் இல்லை .எனில், உடலைவிட ஆன்மா எவ்வாறு மேலானது.
உடல் அழியக்கூடியது ஆன்மா அழிவு இல்லாதது நாம் அழியக்கூடிய உடலுக்காக எடுத்துக் கொள்ளும் அக்கறையை, கவனிப்பை, பராமரிப்பை, செலவிடும் நேரத்தை ஆன்மாவிற்காக செலவிடுவதில்லை.
காரணம் உடல் நம் புற கண்களுக்கு தெரியும் காட்சியாக உள்ளது. ஆன்மா நம் அக கண்களுக்கு மட்டுமே புலப்படும் சாட்சியாக உள்ளது. ஆனால் நிலையானது.
நாம் கண்ணில் காணாததை குறித்து ஏன் கவலைப்பட வேண்டும் என்று பலர் நினைக்கலாம். நம் மனதில் தோன்றும் எண்ணங்களையும் நாம் அறிவில் தோன்றும் புத்திசாலித்தனத்தையும் கூட நாம் பார்க்க முடிவதில்லை .
ஆனால் அவற்றை நம்பியே நாம் இவ்வுலகில் வாழ்கிறோம் .நம் உள் உணர்வு எனப்படும் ஆன்ம சக்தியை சாமானிய மனிதன் தன் சகஜ வாழ்க்கையில் அறிவதில்லை.
இதனை அறிய தியானம் ஒன்றே வழி. எதைக் கேட்டாலும் கொடுக்கும் திறன் உள்ள கற்பக விருட்சம் பிரபஞ்சம். ஆனால் முழு நம்பிக்கையோடு கேட்கும் திறன் அற்றவர்களாக இருப்பது நாம்தான்.
நம்முடைய இந்த அஞ்ஞானமே பிரபஞ்சத்தின் மெய்ஞானத்தை அறிய முடியாமல் நம் புற கண்களை மறைக்கிறது. மற்றவர்கள் கூறும் நம்பிக்கை மொழிகளை கேட்டு நாமும் சிறிது காலம் இவற்றை நம்ப முயற்சிக்கிறோம்.
ஆனால் பாலில் கலந்த துளி விஷம் போல நமக்குள் தோன்றும் இவையெல்லாம் சாத்தியமா என்ற எண்ணமே அனைத்தையும் செயல்பட முடியாமல் மாற்றுகிறது.
மற்றவரின் நம்பிக்கையை நாம் அடைய நினைப்பதும் அவ்வாறே. நம்பிக்கை நம் ஆழ்மனதில் தோன்றி விதையிலிருந்து விருட்சமாக மாறினால் அதாவது எந்தவித சந்தேகமும் இன்றி மாற்றம் அடைந்தால் மட்டுமே எவையும் நடைபெறும் .
இத்தேகம் எல்லாவிதமான ஆனந்த நிலையையும் தங்குத் தடை இன்றி அனுபவிக்க இயலும். எல்லாம் ஆண்டவன் விட்ட வழி என்று முன்னோர்கள் கூறுவதை கேட்டிருப்போம்.
ஆண்டவன் என்ற சொல்லை முன்னோர்கள் உருவாக்கியதே, மனித மனதில் சந்தேகம் இல்லாத நம்பிக்கை உருவாக்குவதற்கு தான் .
நம்பிக்கை வழியில் பயணித்து நாம் இறை சக்தியை உணரவே ,ஆனாலும் நாம் வழிகளையே முடிவாக எண்ணி விட்டோம் .
நதிகளான இறைவழியில் பயணித்து அகம் பிரம்மாஸ்மி எனும் கடலை அடைய வேண்டும் என்பதை மறந்து விட்டோம்.
நதிகளையே கடவுளாக நினைத்து மற்ற மதங்களை குறை கூற ஆரம்பித்தோம்.
இது போன்ற அறியாமைகளை களைவதற்காகவே நமக்கு கிடைத்திருக்கும் அமுதம் போன்ற பொக்கிஷமே ஆனாபானசதி தியானம் .நாமும் இதன் அருமையை உணர்ந்து மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும்.
Comments