தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற பொன் மொழியை நாம் கேட்டிருப்போம்.நமது வாழ்வின் நன்மை தீமைகளுக்கு நாமே பொறுப்பென்று அறிவோம். அவரவர் சொல், செயல், சிந்தனைகளின் பயன்களை அவரவரே அனுபவிக்க வேண்டியுள்ளது.
ஏனென்றால் , நியுட்டனின் மூன்றாம் விதியின் படி எந்த ஒரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர் வினை நிகழ்ந்தேயாக வேண்டியுள்ளது. ஆன்மிகப் புரிதலில் இன்னும் ஒரு படி மேலே போய் அபரிமித விதியின் படி ஒவ்வொரு செயலுக்கும் பல மடங்கு கூடுதலாகவே பலன் கிடைக்கும் என்கிறது.
வண்ணத்துப்பூச்சி தாக்கம் [ BUTTERFLY EFFECT] இந்த கூற்றின் படி புவியில் ஏதோவொரு இடத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்தால் வேறொரு இடத்தில் புயல் அடிக்கும் சாத்தியக் கூறு உண்டு. இதில் நமது சந்தோஷத்தின் மூலம் நாமாகவே இருக்க வேண்டும் என்பதை நாம் நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும்.
நமது சந்தோஷத்திற்காக பிறரை சார்ந்திருத்தல் எவ்வாறு சரியானதாக இருக்க முடியும். நாம் எது செய்தாலும் சமைத்தாலும், ஆடினாலும், பாடினாலும், வேலை செய்தாலும், தியானம் செய்தாலும் யாராவது ஒருவர் அதில் குறை கண்டுபிடித்துக் கொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் கூறியதில் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் நம்மை நாம் திருத்திக் கொள்வதில் தவறில்லை.
ஆனால், அவைகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால், நீங்கள் உங்கள் மகிழ்ச்சியின் குறுக்கே அந்த விமர்சனங்களை வர விடாதீர்கள் நீங்கள் இவ்வாறு முடிவெடுத்தபின் யாராலும் உங்களை காயப் படுத்த முடியாது.
அவரவர் கருத்துக்கள் அவரவருக்கு சொந்தமானதே . அதனின் தாக்கம் உங்களை பாதிக்க அனுமதிக்க வேண்டாம். சில சமயங்களில் அவர்களின் அங்கீகாரம் உங்களுக்கு தேவை என்று நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் சந்தோஷத்தின் கடிவாளம் அவர்களின் கைகளுக்கு செல்கிறது.
யாரோ ஒருவரால் தான் நீங்கள் ஆனந்தமாக உள்ளதாக நீங்கள் நினைத்தால் அதே நபரால் உங்கள் மகிழ்ச்சி பறி போகும் அபாயமும் உண்டல்லவா?
யாருக்காகவும் நாம் உண்மையில் மனம் விரும்பி செய்யும் செயலை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலானவர்களின் தவறே எதிர்பார்ப்பில் தான் தொடங்குகிறது. தாங்கள் எதிர்பார்த்த விளைவுகள் உருவாகாவிடில் மனச் சோர்வடைகின்றனர்.
இக்கணத்தில் வாழ கற்றவர்கள் மட்டுமே அவர்கள் செய்யும் எந்தச் செயல்களிலும் செயல்களுக்கான ஆனந்தத்தை அனுபவிப்பார்கள். இக்கணத்தில் வாழ்வதற்கு விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியம்.
அந்த விழிப்புணர்வை தியானம் மட்டுமே தர முடியும். நாம் தனித்துவமானவர்கள் யாரையும் எதற்காகவும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை தியானத்தின் மூலம் நாம் அறிந்துக் கொள்ளலாம்.
இந்தப் புரிதல் தருவதே உண்மையான சுதந்திரம் உண்மையான சந்தோஷம் . நமது சந்தோஷம் யார் கைகளிலும் இல்லையெனில் அது பறி போகும் வாய்ப்பும் இல்லையல்லவா? இதனுடனே நமக்கான பொறுப்பும் அதிகரிக்கிறது.
நமது வாழ்வில் எப்படி யாரும் தலையிட உரிமையில்லையோ அதேப்போல அடுத்தவர் வாழ்வில் தலையிட நமக்கும் உரிமையில்லை. இந்தப் புரிதல்கள் அனைவருடனும் இணக்கமாக வாழும் வாழ்க்கையை கொடுக்கும். அவரவர் சந்தோஷம் அவரவர் கைகளில்
Comentários