top of page

மனம் என்பது மாயையா அல்லது மார்க்கமா


Mind is illusion or religion
Mind is illusion or religion

ஆன்மிகத்தில் முதன்முதலாக நுழையும்  எந்த ஒரு மனிதரும் தியானத்தில் அமரும் போது கேட்கும் வார்த்தை மனமற்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்பதே . மனமற்ற நிலைக்கு செல்வது என்றால் என்ன?


மனமற்ற நிலைக்கு சென்றால் தான் விஸ்வ சக்தியை பெற முடியும் எனவும் கூறுகின்றனர். மனமற்ற நிலையை அறிவதற்கு முன் மனம் என்றால் என்பதை அறிய வேண்டும் .


குழந்தையாக பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் மனமென்பதே முதலில்  இருப்பதில்லை. பின்னர் எது மனமாக மாறுகிறது. இதற்கான விடையே மனமற்ற நிலைக்கு செல்வதற்கான மார்க்கமாக இருக்க முடியும்.


கடந்த கால பதிவுகளும் மற்றும் சூழலில் இருப்பவர்களின் தாக்கமும், பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், உறவினர்கள்,மதம் சார்ந்த பதிவுகள் என பலவும் , மனதை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


இவ்வாறு உருவான மனமானது மிக மெதுவாக நம்மை வழி நடத்தும் பொறுப்பேற்கிறது. இந்த எண்ணங்களின் தொகுப்பால் உருவான மனம் பின்னர் , நமது குணங்களாகவும் மாறுகிறது. எண்ணங்களுக்கு வலிமை அதிகம் என்பதால் அதில் இருந்து விடுபடுதல் என்பது சிக்கலாகவே உள்ளது.


பத்ரிஜி அவர்கள் கூறுவது போல தியானத்தில் மட்டுமே எண்ணங்களின் செயல்பாடுகள் பெருமளவு குறைக்கப்படுகிறது. தியானம் என்பது நிகழ் கணத்தில் நம்மை இருக்கச் செய்வது.


உண்மையில் தியானத்தில் மனமானது இறக்கும் நிலை உருவாகும். அதனால் தான்  பெரும்பாலானோர் தியானத்தில் அமரும் போது எண்ணங்களின் அடர்த்தியால் தியான நிலைக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.


நம்முடைய ஒவ்வொரு செயலும் மனதின் அடிப்படையில் தான் இயங்குகிறது. மனமானது கடந்த காலம் மற்றும் எதிர்கால கனவுகளில் மட்டுமே வாழ முடியும் . நிகழ்கணத்தில் மனமானது நின்று விடுகிறது.


உண்மையில் நிகழ்கணங்கள் மட்டுமே நிகழும் சாத்தியமுடையவை. பாதுகாப்பு இல்லாதவை. உதாரணமாக திடீரென்று ஒரு விபத்து போன்ற ஒரு ஆபத்தை நாம் எதிர் கொள்ள நேர்ந்தால் மனமானது செயலற்று போவதை நாம் உணர்ந்திருப்போம்.


மனமற்ற நிலைக்கு செல்வதற்கு மனம் செயல்பட முடியாத நிகழ்காலத்தில் இருப்பது ஒன்றே ஒரே வழி. அதைத்தான் அனைத்து ஆன்மிக குருமார்களும் வலியறுத்துகின்றனர். இதற்கு தியானம் மிகவும் துணை செய்கிறது.


ஏனெனில் நிகழ்கணத்தில் எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. செயல்களுக்கான பலன்களை எதிர்பார்ப்பது நிகழ் கணத்தில் நடைபெறாது. செயல்களை செய் பலன்களை எதிர்பாராதே என்ற கீதையின் வாக்கியம் செயல்படுவதும் நிகழ்கணத்தில் தான்.


எனவே மனதை மாயை என்றழைக்கலாமா?  மாயை என்றால் இல்லாதது இருப்பது போல காட்சியளிப்பது என புரிந்துக் கொள்ளலாம் .எனில் மனமென்பதே தேவையற்ற ஒன்றா?  தேவையற்றதாயின் உருவாக வேண்டிய காரணம் என்ன?


பிரபஞ்சத்தில் தேவையற்ற எதுவும் உருவாவதில்லை. மனதை வைத்து தான் நான் எனும் உணர்வை நாம் பெறுகிறோம். நான் என்ற உணர்வு மனிதர்களைத் தவிர உலகின் எந்த ஜீவராசிகளுக்கும் சொந்தமானதல்ல.


நான் என்ற உணர்வின் மூலமே நான் யார் என்ற தேடுதலும் உருவாகிறது . அதன் தொடர்ச்சியாகவே நாம் ஆன்மிகப் பாதையில் அடியெடுத்தும் வைக்கிறோம். எனவே மனமே நமக்கான மார்க்கம் அதாவது வழியையும் உருவாக்குகிறது.


மனதிற்கு நாம் ஆட்படாமல் மனதை நாம் ஆட்படுத்திக் கொள்ளும் பொழுது மனமானது நமக்கு தேவைப்படும் போது மட்டும் செயல்படும் உற்ற துணைவனாக மாறும் . பிரபஞ்சத்தில் எதுவும் நமக்கு எதிரியல்ல  

1 view0 comments

Comments


Message for Guided meditation for anxiety
bottom of page