வாழ்க்கையில் பெரும்பான்மையான மக்கள் முதலில் வெற்றி கரமான வாழ்க்கையைத் தான் விரும்புகிறார்கள் . ஆனால் வெற்றிகரமான வாழ்க்கை எது என்பதில் தான் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
செல்வம், பொருள், பதவி. அதிகாரம், அரசியல், செல்வாக்கு போன்ற பலவற்றை வெற்றிக்கு அடிப்படையாக நாம் நினைக்கிறோம் .ஆனால் இவை வாழ்வில் கிடைத்துவிட்டாலும் நமக்கு நிறைவு ஏற்படுவதில்லை.
இந்த திருப்தின்மை நமக்குள் ஒரு தேடுதலை உருவாக்குகிறது. சிலர் இந்த திருப்தியை மேலும் துன்பத்தை தரக்கூடிய வழிகளிலும் தேடுகின்றனர். சிலர் ஆன்மிக வழிகளை நாடுகின்றனர்.
ஆன்மிகத்தின் அடிப்படையான தியானத்தை பலர் விரும்பி கற்று அதில் தீவிர பயிற்சி செய்யவும் செய்கின்றனர். எனினும் சில நேரம் தியானம் செய்வதால் மட்டுமே நம்முடைய மனதில் முழுமையான நிறைவு ஏற்படுவதில்லை.
தியானம் என்பது வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே அல்ல . நீங்கள் எந்த வகையான தியானத்தை செய்தாலும் எவ்வளவு அதிக நேரம் செய்தாலும் அதைச் செய்யும் போது கிடைக்கும் மன அமைதி எவ்வளவு நேரம் நீடித்துள்ளது என்பதே மிக முக்கியமானது.
தியானம் செய்யாத சமயத்திலும் நம்முள் ஆனந்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.
வாழும் நேரத்திலும் ஆனந்தமாக வாழ வாழ்வின் ஒரு பாகமாக தியானம் இருப்பதில் பயனில்லை. வாழ்வே தியானமாக மாற வேண்டும் அப்போது தான் என்றென்றும் பேரானந்தத்தை அனுபவிக்க முடியும்.
வாழ்வே தியானமாக மாறுவது எப்படி? தியானத்தில் அனுபவிக்கும் மனமற்ற நிலையை நாம் செயல்படும் பொழுதும் அனுபவிக்க வேண்டுமானால் மனதை உருவாக அனுமதிக்க கூடாது.
மனதின் உருவாக்கம் கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளினால் மட்டுமே ஏற்படுகிறது.
நாம் எப்பொழுதும் நிகழ்காலத்தில் மட்டுமே வாழக் கற்றோமானால் நாம் என்றும் கண் விழித்திருக்கும் சமயத்திலும் மனமற்ற நிலையில் வாழலாம்.
நாம் ஒவ்வொரு செயலையும் முழு விழிப்புணர்வோடு செய்ய வேண்டும். செயல்படும்பொழுது பல நினைவுகளில் மனதை சிதறடிக்க விடக் கூடாது.
பதறாத காரியம் சிதறாது என்பர் முன்னோர் . செய்யும் தொழிலே தெய்வம் என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளதன் பொருள் இதுவே ஆகும்.
நமது முழுக்கவனமும் நமது செயல்களில் இருக்கும் போது அந்தச் செயல்கள் தெய்வீகத் தன்மையை அடைகின்றன. செயல்களின் பலன்களிலும் நாம் சிக்குவதில்லை.
செயல்களிலிலேயே அந்தச் செயலுக்குரிய ஆனந்தத்தை பெற்று விடுகிறோம். அதன் பலன்களைக் குறித்த சிந்தனைகளும் நம்முள் தோன்றுவதில்லை.
இதுவே கீதையில் கண்ணன் கூறிய கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதன் தாத்பர்யம். ஆகும்.
பலன்களை எதிர்பார்க்காத செயல்கள் அதன் பூரணத்துவத்தை அடைவதால் அதை செய்யும் நாமும் முழு பேரானந்தத்தை அடைய முடிகிறது.
பின்னரே ரமண மகரிஷி கூறும் நான் யார் என்பதை உணரும் தத்துவம் நம்முள் உருவாகும்.
நம்முடைய செயல்களையே சாட்சி பாவமாக பார்க்கும் மனப் பக்குவம் தோன்றுவதால் நான் யார் என்பதை உணரும் நிலையை நெருங்குகிறோம்.
செய்பவன் செய்யும் செயல் என பிரிவதால் செயல்களைச் செய்பவனை பிரித்தறியும் ஞானம் தோன்றும் . முக்திக்கான முதல் படியில் நுழையும் தகுதிப் பெற வாழ்வே தியானமாக வாழக் கற்பதே ஒரே மார்க்கமாகும்.
Read more blogs through PMC Tamil Website.
Comments