மனிதர்களாகிய நாம் விழிப்புணர்வு என்றால் தூங்கி விழிப்பதையே நினைக்கிறோம். உண்மையில் ஞானிகளின் கூற்றின்படி பெரும்பாலான மனிதர்கள் தங்கள் மொத்த வாழ்வையும் தூக்கத்தில் தான் கழிக்கின்றனர். சிலர் தூக்கத்திலேயே வாழ்வு மொத்தத்தையும் வாழ்ந்தும் முடித்து விட்டு உடல் துறக்கின்றனர்.அப்படியெனில் விழிப்புணர்வு என்பது என்ன?
மிருகங்கள் கூட தங்கள் எல்லைகளை வரையறுத்துக்கொண்டு தான் வாழ்கின்றன. மனிதன் மட்டுமே தன்னையும் அறிவதில்லை. தன் எல்லைகளையும் அறிவதில்லை. ஐந்தறிவு என அறியப்படும் உலகின் பிற உயிரினங்கள் அனைத்தும் உயிர் சழற்சியான உணவுச் சுழற்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஆறறிவு என தன்னை வெளிப்படுத்தும் மனிதனின் செயல்பாடானது ஓரறிவு உள்ளதாக கூட அவனைச் சித்தரிப்பதில்லை முதலில் அவனுக்கு அவனைக் குறித்த விழிப்புணர்வும் இருப்பதில்லை.
என்ன பேசுவது , எவ்வளவு பேசுவது, எதைப் பேசுவது என்பதைக் குறித்தும் அறிவதில்லை. என்ன சிந்திப்பது , எப்பொழுது சிந்திப்பது, எதை உண்பது எவ்வளவு உண்பது, எப்பொழுது உண்பது போன்ற அடிப்படை விஷயங்களில் கூட தன்ணுணர்வுடன் செயல்படுவதில்லை. தான் விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுகிறோம் என்ற விழிப்புணர்வும் அவனுக்கு இல்லாமல் இருப்பது தான் உலகின் பெரிய விந்தை. இருண்ட வீட்டில் உள்ளவனுக்கு இருள் தான் சரியானது என்று தோன்றுவது போல மனிதனுக்கும் தான் செய்வதே சரி என்ற நினைப்பில் தான் பெரும்பாலும் செயல்படுகிநான் .
தவறை உணர்பவர்களே முதலில் அதை திருத்திக் கொள்ள முடியும். அவனது வெளிநோக்கு பார்வையை மாற்றி அவனது அகப் பார்வையை வளர்த்தலே இதற்கான தீர்வாக அமையும். அகப் பார்வை என்பது தன்னை முதலில் கவனித்து தெளிவு பெறுதல். இதற்கு ஆன்மிகம் ஒன்றே ஒரே வழி. ஆன்மிகப் புரிதலுக்கு தியானம் ஒன்றே ஒரே வழி. பூட்டப்பட்ட வீட்டின் ஜன்னல் திறப்பது போல மனிதன் முதன் முதலாக புரிதலின் கிரகணங்களை தியானம் மூலம் பெறுகிறான். மனதின் மூலம் மட்டுமே வாழ்ந்த மனிதன் மனதிற்கு அப்பாற்பட்டவைகளைக் காண்கிறான்.
அவனிடம் முதன்முறையாக சுதந்திர உணர்வு பிறக்கிறது. இத்தனை நாளும் மற்ற புலன் உணர்வுகளுக்கும் மற்றும் மனதிற்கும் சேவகனாக தான் இருந்ததை புரிந்துக் கொள்கிறான் . ஏனென்றால் தியானம் செய்யும் பொழுது மனமானது செயல்படுவது தவிர்க்கப் படுகிறது. மனம் செயலற்று இருக்கும் இக்கணத்தில் தான் தன்னை உணரும் முதல் வித்து முளை விடத் தொடங்குகிறது. பின்னர் அவன் தன் மனதிற்கு எஜமான்னாக மாறுகிறான். இதன் பின்னரே முழுமையான விழிப்புணர்வு அவனுள் உருவாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.
உண்மையில் தியானம் உங்களை மனதினிலிருந்தும் மற்றும் சேமிக்கப்பட்ட பிறருடைய கருத்துக்களினால் உருவான அறிவிடமிருந்தும் முழுமையாக விடுவிக்கிறது. சுய விழிப்புணர்வை உண்டாக்குகிறது. இறுதியாக இறைவனிடம் மனிதனை அழைத்துச் செல்லும் ஒரே கருவியாகவும் அமைகிறது.
Comments