அன்பு என்பதன் முழுப்பொருள் புரிந்தாலே அன்பும் அகங்காரமும் இரு எல்லைகளா அல்லது வெவ்வேறு முகமூடி அணிந்த ஒரே பொருள் கொண்டவையா என்பது விளங்கும். அன்பும் அகங்காரமாகுமா என சிலருக்கு சந்தேகம் எழலாம். முதலில் நாம் அன்பு என்று சொல்வதன் பொருளைக் காண்போம். நான் என் குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பு கொண்டவர், என் உறவினர்கள் மீது அன்பு உண்டு, என் நண்பர்களை நேசிக்கிறேன்,என் துணைவி அல்லது துணைவர் மீது அன்பு கொண்டுள்ளேன், என் சக பணியாளர்களை விரும்புகிறேன் மற்றும் கடவுள் மீது அன்பு நிறைந்தவர் என பல விதத்தில் நாம் நம்மை கணித்து வைத்துள்ளோம்.
இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மையாக கூறினால் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு உண்டா?. சிலர் கைம்மாறை எதிர்பார்க்கலாம். சிலர் நன்றியை , ஒரு சிலர் மதிப்பை, சிலர் தன்னை அவர்களும் விரும்பும் அன்பையே எதிர்பார்க்கலாம். எந்த எதிர்பார்ப்பும் அன்பாக முடியாது.ஒரு வகையில் அது ஒரு வியாபாரமே. நான் உன்னை விரும்பும் நிலையில் நீ இருக்கிறாய் என்ற உணர்வும் கூட ஒரு அகங்காரத்தின் வெளிப்பாடே. அன்பானது விவரிக்க சற்று கடினமானதே. அன்பானது தலை வணங்குவதில் மகிழ்ச்சி அடையும் .அகங்காரம் வளையாது. அன்பானது கொடுக்கும் பொழுதும் , அகங்காரமானது பெறும்போதும் ஆனந்தம் பெறுகிறது.அன்பிற்கு உள் நோக்கம் கிடையாது மற்றும் ஆதாயம் தேடாது.
இவ்வாறான அன்பை எங்கு காணலாம் ?பிரபஞ்சத்தின் அன்பே என்றும் முழுமையானது. பிரபஞ்ச அன்பை புரிந்துக் கொள்வது எவ்வாறு?அந்த அன்பின் ஒரு துளி சுவைத்தாலுமே நம்முள் அதன் ஆனந்தத்தை உணரலாம் அதற்கான வழி அந்த பிரபஞ்ச அன்பை புரிந்தவர்கள் உடன் நாம் உருவாக்கிக் கொள்ளும் தொடர்பு மட்டுமே. ஆன்மிக வழியில் சென்று ஆன்மாவின் தன்மையை உணர்ந்த குருமார்களின் அண்மை நமக்கு உதவும். அப்படி ஒரு குருவை கண்டடைய முடியாவிட்டால் பிரமிட் ஆன்மிக மன்றத்தை துவக்கிய பிதாமகர் பத்ரிஜி அவர்கள கூறியது போல நம் சுவாசமே நமது குருவாக பயிலும் ஆனாபான சதி தியானம் நமக்கு நிச்சயம் கை கொடுக்கும்.
இது மிக எளிதான தியானம் மட்டுமல்ல. நம்மை நாம் அறிவதற்கும் அதன் மூலம் பிரபஞ்சத்தை புரிந்துக் கொள்வதற்குமான ராஜ யோகமாகும். எந்த தியான முறையிலும் நம்மை நாம் உணர்தல் என்பதே தலையாய புரிதலாக உள்ளது. நம்மை புரிந்துக் கொள்தலே உண்மையான அன்பின் தன்மையை நமக்கு உணர்த்த முடியும். அன்பானது அதன் மறு எல்லையாக கருதும் அகங்காரத்தை உணர்வது கூட இல்லை. பிரபஞ்சத்தின் நம் மேல் கருணை மழையாக பொழிந்துக் கொண்டிருப்பதை உணர்வதற்கு அதன் இயக்கத்தின் விதிகளை நாம் அறிய வேண்டியது அவசியம் .இவை அனைத்தும் தியானம் மூலமே சாத்தியமாகும்.
அன்பானது ஒளியைப் போல தன்மை உடையது . ஒளிக்கு என்றும் இருளின் தன்மை தெரிவதில்லை.ஒளி வரும் நேரம் இருள் அங்கு இருப்பதில்லை. அன்பு மனதில் நிறையும் நேரம் எந்த எதிர்மறை எண்ணங்களுக்கும் அங்கு இடமிருப்பதில்லை. அன்பு தான் செய்கிறோம் என்பதை கூட உணராது. அதற்கு எந்த விதமான தடைகளும் இல்லை.எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லை.அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் என வள்ளுவன் கூறியதும் இந்த தன்மையைத் தான் . அன்பே சிவம் , அன்பே கடவுள் என்று மகான்கள் கூறுவதும் ஒப்பிட முடியாத இந்த அன்பின் தன்மையைத்தான்.
Comments