மக்கள் பொதுவாக தனிமையில் இருப்பதை விரும்புவதில்லை. பெரும்பான்மையான மக்கள் நான் யாரையும் சார்ந்திருப்பதில்லை என்றும் பிறரே என்னைச் சார்ந்திருக்கின்றனர் என்றும் கூறுவார்கள்.
பிறர் உங்களை சார்ந்திருத்தலும் ஒரு வகை சார்ந்திருத்தலே . நம்மைச் சார்ந்து பிறர் இருக்க வேண்டும் என எண்ணுவதும் நாம் அவர்களை சார்ந்திருக்கிறோம் எனும் நிலைதான் .
பின் யார் முழுமையாக சுதந்திரம் பெற்றவர் ? யார் மற்றவருக்கும் முழுமையாக சுதந்திரம் அளிக்கின்றனரோ அவரே தானும் சுதந்திரம் பெறுகிறார் . இந்த சுதந்திரம் பெறுகிறவரே முழுமையான தனிமையிலும் பேரானந்த நிலையில் இருப்பார்கள்.
தனிமை கண்டு சிலர் பயப்படுகிறார்கள் . நம்முடைய உண்மையான சுயம் வெளிப்படுவது தனிமையில் மட்டுமே. தன்னுள் இருக்கும் பலவித குறைகளை காண அஞ்சுபவனே தனிமையைத் தவிர்க்கிறான் என மிர்தாத் அவர்கள் மிக அருமையாக கூறியுள்ளார்.
நாம் தனிமையைத் தவிர்ப்பதற்காக நமது நேரத்தை வேண்டாத பேச்சுகள் பேசுவதிலும், தேவையில்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கும் மற்றும் வம்பு பேச்சுகளை கேட்பதற்கும் செலவிடுகிறோம்.
தனிமையில் இருக்கும் பொழுது நாம் வெளி உலகத்திற்காக அணியும் முகமூடிகளை கழட்ட வேண்டியுள்ளது. நாம் ஒவ்வொருவரும் பலவித சூழல்களுக்காக அணியும் முகமூடிகளை சில காலத்திற்கு பின் நாமே அவற்றை உண்மையென நம்பத் தொடங்குகிறோம்.
அம்மாதிரியான நம்பிக்கைகள் நாம் தனிமையில் இருக்கும் போது தகர்க்கப்படுகின்றன. எனவே தான் பலர் தனிமையை விரும்புவதில்லை. தியானம் என்பது நம்மை நமக்கு முழுமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.
தனிமையில் இருக்கிறேன் என்னும் சிலர் டிஜிட்டல் என்னும் இணைய தள தொடர்புகளை தவிர்க்க இயலாமல் அதற்கு அடிமையாக மாறி விட்டு தனிமை என்பதன் பொருளைக் கூட அறியாமல் இருக்கின்றனர்.
உண்மையான மௌன தியானத்தில் தான் நாம் சரியான தனிமை நிலையில் இருப்பதற்கான சூழல் உருவாகும். தனிமைக்கும் மௌனத்திற்கும் தொடர்பு உண்டு. மௌனத்திற்கும் தியானத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
தனிமையில் முழுமையாக இருக்கும் நேரம் முதல்முதலாக தன்னைத் தான் உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உருவாகும்.
தன்னை தன் குற்றங்குறைகளோடு யாரெல்லாம் ஏற்றுக் கொள்ள முடிவு செய்கின்றனரோ அவர்களே பிறரையும் அவர்களின் குறைகளோடு ஏற்றுக் கொள்ளும் இயல்பைப் பெறுகின்றனர்.
சுய அன்பின் முக்கியத்துவமும் தனிமையில் மட்டுமே புரியத் தொடங்கும். ரிச்சர்ட் ஃபாக் என்னும் பிரபல ஆன்மிக எழுத்தாளர் இவ்வுலகத்தில் சோகமும் துன்பமும் நிறைந்துள்ளது எனக் கூறுபவன் அறியாமையில் இருக்கிறான் எனக் கூறுவார்.
இந்த உன்னத வாக்கியத்தின் பொருள் முழுதாக விளங்க வேண்டுமானால் தனிமையின் சுயப் பரிசோதனை என்பது மிக முக்கியம்.
அச்சமயத்தில் தான் தன்னை உணர்தலும் பிறரை புரிந்துக் கொள்தலும் மற்றும் இந்த மொத்த பிரபஞ்ச இயக்கத்தின் செயல்பாட்டின் ஒழுக்கத்தையும் நாம் புரிந்துக் கொள்ள முடியும்.
குருமார்கள் இந்த ஆன்மிகப் பாதையில் வழி காட்டலாம் . இருப்பினும் அவரவரின் சொந்த புரிதல்கள் உருவாவது சுத்த தனிமையில் இருக்கும் போது மட்டுமே.
மனதின் தொடர் நச்சரிப்புகள் குறையும் போது மட்டுமே அக்க் குரலின் ஒலியை அதாவது இறைத்தன்மையின் ஒலியை நம்மால் கேட்க முடியும். வாழ்வில் இயல்புத் தன்மையை புரிந்துக் கொள்ளவும் முடியும்.
Comments