இன்று இந்தியாவின் 78 வது சுதந்திர தினமாகும். இந்தியா சுதந்திரம் பெற்று பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டே வருகிறது. எனினும் முக்கியமான வளர்ச்சி என்பது மனிதர்கள் தங்கள் சக மனிதர்களை நேசிப்பதே ஆகும். அனைவரையும் எந்த சாதி ,மத, மொழி, இன மற்றும் நாடு என்ற பேதமின்றி மனிதர்களாக மதிக்க கற்றுக் கொள்தலே உண்மையான சுதந்திரம் ஆகும். இதற்கான புரிதலை ஆன்மிகம் மட்டுமே அளிக்க முடியும்.
இந்தியா என்றென்றும் உலகிற்கான ஆன்மிக வழிகாட்டியாக உள்ளது. பெரும்பாலான குருமார்கள் ,ஆசான்கள் ,சித்தர்கள் மற்றும் ஆன்மிக வழிகாட்டிகள் இங்கு தோன்றியுள்ளனர். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு குருமார்கள் தோன்றி உலகை வழி நடத்தி உள்ளனர். இருப்பினும் மீண்டும் மனிதர்கள் பாதை மாறுவதற்கான வாய்ப்புகள் இங்கு உருவாவதால் நாம் நம்மை சரியாக நிலை நிறுத்திக் கொள்ள புரிதல் தேவைப்படுகிறது. இப்புரிதலை வழங்குவது தியானம் மட்டுமே .
உலகிற்கு தற்போதைய முக்கியமான தேவை என்னவென்றால் அமைதி மட்டுமே. அமைதி குலைய காரணம் புரிதல் இன்மையே. சரியான புரிதலுக்கு அடிப்படையான விஷயம் ஆன்மிகமே. ஆன்மிகம் என்றால் நிகழ்வுகள் ஏன் நடைபெறுகின்றன என்பதை உணர்வதற்கான உண்மையான வழியை தியானம் மூலம் காட்டுவதாகும். நமது பாரத தேசத்தின் பாரம்பரிய சொத்தான ஆன்மிக ஞானத்தை தற்காலத்திற்கு ஏற்ப ஆன்மிக விஞ்ஞானமாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த ஞானத்தை உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும்.
இந்திய மக்கள் புத்தரின் வழி வந்தவர்கள். இந்திய மக்கள் காந்திஜியின் வழி நடப்பவர்கள் . புத்தரின் புதல்வர்களாக நம்முடைய கடமை உலகம் முழுமைக்கும் புத்தரின் ஞானத்தையும் அவரின் எளிய தியான முறையையும் கொண்டு செல்வதே ஆகும். மேலும் காந்திஜியின் அஹிம்சை வழி நடந்து நாட்டை மேன்மேலும் முன்னேற்ற வேண்டும்.எனவே யாரையும் துன்புறுத்தாத வகையில் உலகில் உள்ள அனைவரும் தம் வாழ்வை முன்னேற்றி ஆனந்தமாக வாழ்வதற்கான ஆன்மிக வழிகாட்டியாக இந்தியா திகழ வேண்டுமென்பதே இந்த 78 வது சுதந்திர தின தீர்மானமாக இருக்க வேண்டும்.
Comentários