இந்த உலகம் பொதுவாக மூன்று விஷயங்களில் அடங்கி விடுகிறது. மிர்தாத் அதை புனித மும்மைகள் என அழைக்கிறார். இந்துக்கள் அதை மும்மூர்த்திகள் என படைத்தல் காத்தல் மற்றும் அழித்தல் செயல்களுடன் தொடர்பு படுத்துகின்றனர். கிருஸ்துவர்கள் அவற்றை பிதா சுதன் பரிசுத்த ஆவி என்கின்றனர்.ஆன்மிகவாதிகள் இப்பரவசத்தை சத் சித் ஆனந்தம் என்கின்றனர்.கவிஞர்கள் இந்த நுண்ணறிவை சத்தியம் சிவம் சுந்தரம் என்பர்.அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தின் கடைசியாக பகுக்ககூடிய அணுத்துகளை ஆராய்ந்து புரோட்டான் எலக்ட்ரான் நியுட்டான் எனப் பிரிக்கின்றனர். ஆதி ஓசையாக கருதப்படுவது ஓம் என்ற ஒலியே இதைப் பிரித்தால் வருவது அ உ ம் என்ற மூன்று எழுத்தே. காலங்களும் கடந்த காலம் நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் என நாம் பிரித்து வைத்துள்ளோம்.
இந்த புனித மும்மைகளுக்கான சிறப்பு என்பது ஊசலின் ஆட்டம் போல் நாம் வாழும் வாழ்க்கையின் அசைவைக் குறிக்கும் குறியீடாக உள்ளது. ஊசல் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு செல்லும் போது இரு எல்லைகளுக்கு செல்கிறது. பின் அதன் அசைவுகள் நிற்கும் பொழுதே நடு நிலையில் நிற்கும் சக்தி பெறுகிறது. ஆதி உள்ளுணர்வு நடு நிலை என்றால் அதனின்று தோன்றிய நான் என்ற பிரிதல் ஒரு பக்கமாகவும் அதனை புரிந்துக் கொள்ள வேண்டிய தன் உணர்வு மறு பக்கமாகவும் ஊசலாடுகிறது. பிறவிகளில் இந்த அலைவு உள்ளவரை நம் ஜென்மங்கள் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கும். மூன்றும் ஒன்றின் ஒத்திசைவே என்பது உணரப்படும் வரை நம் ஆட்டம் முடிவதில்லை.
ஓம் என்ற பிரபஞ்சத்தின் ஆதி ஒலியைத் தாண்ட முனைந்து வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அந்த இருப்பின் சூன்ய தன்மையை உணர வாய்ப்பு பெற்றவர்கள். இந்துக்களின் குறீயீடான முத் தொழில்களை தாண்டினால் செயலற்றதன் தன்மையை உணர முடியும். ஆன்மிக வாதிகளும் சத் சித் ஆனந்தத்தை கடக்கும் பொழுது விவரிக்க இயலா பேரின்பத்தின் முழுமையை பெற இயலும். அறிவியலாளர்களும் எலக்ட்ரான் என்பதை ஒரு பொருளாக பகுக்க முடியவில்லை என்றும் அது ஒரு நிலையற்ற தன்மையில் உள்ளது எனவும் ஒப்புக் கொண்டுள்ளனர். முயற்சி செய்தால் ஒரு வேளை அனைத்துப் பருப் பொருள்களுமே உண்மையில் முடிவில் பொருளற்றவையே என்ற கருத்தானது உறுதிப்படுத்தப்படலாம். காலங்களில் கடந்த காலம் திரும்புவதில்லை, எதிர்காலம் அறியப்படுவதில்லை, நிகழ்காலமும் மற்ற காலங்களுடன் இணையாக பயணிக்கும் (Parallel Reality) எனவும் நிரூபிக்கப் பட்டு வருகிறது.
இப்புனித மும்மைகள் நமக்கு தெளிவாக விளக்குவது செயல்களின் எல்லை செயலற்ற தன்மையே ஒலியின் முடிவு ஓசையற்ற தன்மையே காலங்களின் வரம்பு காலமற்ற நிலையே பொருள்களின் முடிவு பொருளற்ற தன்மையே. உணர்வுகளின் எல்லைகளும் உணர்வற்ற தன்மையே அழகு ஆனந்தம் நிலையானது என ஏதுமற்ற தன்மையில் சூன்ய நிலை தான் அனைத்தின் மையமாக உள்ளதை தெளிவுபடுத்துகிறது. அந்த ஒலியில்லாத , ஓசையில்லாத, உணர்வில்லாத,செயலில்லாத, பொருளில்லாத, காலங்களை கடந்த, நிலையில்லாத, வரையறுக்க இயலாத, எல்லைகளில்லாத சூன்ய பெருவெளி நம்முள்ளும் உறைந்திருப்பதை அறிவதே உண்மையான ஆன்மிகமாகும்.
அதனை அறிந்துக் கொள்ளும் முன் நாம் இந்த மும்மைகள் அனைத்தையும் கடக்க வேண்டி உள்ளது. இதனை அறிவாக உணர்ந்து அறிய முடியாததை உள் உணர்வாக புரிந்துக் கொள்வதற்கு தியானம் என்னும் அற்புதமான கருவி நம்மிடம் உள்ளது. உண்மையை தேடுபவர்களுக்கு இது ஒரு அருமையான வழிகாட்டி. உள்ளும் புறமும் ஒன்றே உள்ளது என்பதையும் என்னுள் உள்ளது தான் பிரபஞ்சம் எங்கும் நிறைந்துள்ளது என்பதையும் வெளிப்படுத்தும் அரிய பாதையே ஆன்மிகப் பாதை.
Comments