1.சரியான தியானப் பயிற்சி செய்ய வேண்டும்.ஆனாபானசதி தியானமே சரியான தியானமாகும். இதை மற்றவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும். கடினமான ஆசனங்களையோ மூச்சுப் பயிற்சி போன்ற முறைகளையோ மேற்கொள்ளக் கூடாது.
இது போன்ற செயல்கள் மனதை செயல் படச் செய்யும். தியானம் என்பது மனமற்ற நிலைக்கு செல்லுதலே. கடினமான செயல்முறைகளால் மனமானது செயலற்ற தன்மைக்கு செல்வதில்லை.
சுக ஸ்திர ஆசனமே தியானத்திற்கு ஏற்ற அமர்வாகும். முதுகை நேராக வைத்துக் கொள்ளக் கூட சிரமப் பட வேண்டாம். சுவரின் ஆதரவை ஏற்றுக் கொண்டு சாய்ந்தும் அமரலாம். நீண்ட நேரம் தியானநிலையில் இருப்பதற்கு இது போன்று அமர்வதே துணை செய்யும்.
கண்களை மூடிக் கொண்டு கைகளையும் கால்களையும் பிணைத்துக் கொண்டால் ஒரு ஆற்றல் வளையத்தை நாம் உருவாக்கலாம். பின்னர் நம்முடைய இயல்பான சுவாசத்தை கவனித்தலே போதுமானது. மனமானது சுவாசத்தின் செயல்பாடான நிகழ் கணத்தில் இயங்குவதில்லை.
2. உயர்தர ஆன்மிக புத்தகங்களைப் படிக்க வேண்டும்.உதாரணத்திற்கு, ஓஷோ, லோப்சாங்ரம்பா,கார்லோஸ் காஸ்டினேடா,அன்னி பெசன்ட் ,லிண்டா குட்மேன்,ஜேன் ராபர்ட்ஸ், தீபக் சோப்ரா மற்றும் சில்வியா பிரவுன் போன்றவர்களின் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
இவை ஒரு சிறு உதாரணங்களே. உலகமெங்கும் எண்ணற்ற ஆசான்களின் கணக்கிலடங்கா புத்தங்கள் உள்ளன. அனைத்தையும் கூடிய வரை தேடிப் படிக்க வேண்டும். வேற்று மொழிகள் தெரியுமென்றால் அந்த மொழியில் உள்ள புத்தகங்களையும் வாசிக்கலாம் இல்லையென்றால், மொழிப்பெயர்ப்பு புத்தகங்களை வாசிக்கலாம்.
இந்த புத்தக வாுசிப்பானது நமது ஞானத்தை விரிவடையச் செய்யும். மேலும் அந்தந்த ஆசான்களோடு சூட்சும நிலையில் தொடர்புக் கொள்ளவும் செய்யும்.
3. தியான அனுபவங்களையும் மற்றும் வாழ்வில் ஏற்பட்ட பிற அனுபவங்களையும் மற்ற தியானிகளோடு பகிர்ந்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கும் ஒரு தெளிவு உண்டாகும். அனுபவங்கள் இயற்கையானவையே என்ற புரிதல் உண்டாகும்.
அதிக அனுபவங்களைப் பெற்றதால் சில சமயம் நம்முள் உருவாகும் அகந்தையும் மற்றவர்களுக்கும் இந்த அனுபவங்கள் நேர்கின்றன என்ற புரிதல் மூலம் மறையக் கூடும் . அனைவரின் அனுபவங்களும் ஒரே போல இருக்க வேண்டிய அவசியமில்லை.
4. கண்களை மூடி் தியானம் செய்த பின்னர், கண்களை திறந்து பிற பணிகளில் ஈடுபடும்போது முடிந்த வரை மௌனமாக இருக்க வேண்டும். தியானத்தினால் கிடைக்கும் பிரபஞ்ச ஆற்றலானது வீணாக்காமல் மௌனம் மூலம் சேமிக்கப்படும்.
மௌனமாக இருக்கும்போது அகப் புரிதல்கள் மேலும் அதிகரிக்கும்.சாட்சி பாவமாக இருக்கும் பழக்கமானது உருவாகும். அடுத்தவர் பேசுவதை கேட்கும் பொறுமையும் உருவாகும். மற்றவர் விஷயங்களில் தலையிடுவதை நிறுத்துவீர்கள். வம்பு பேச்சுகள் அறவே நீங்கும்.
5. முழு நிலவு நாட்களில் பிரபஞ்ச சக்தி கூடுதலாக கிடைப்பதால் அந்த நாட்களை ஆழ்நிலை தியானத்திற்கு பயன்படுத்துவது சாலச் சிறந்தது. பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களுக்கு முன்னர் இரண்டு நாட்களும் , பின்னர் இரண்டு நாட்களிலும் கூட பிரபஞ்ச ஆற்றலின் சக்தியை நாம் கூடுதலாகப் பெறலாம்.
மேலும் இந்த நாட்களில் செய்யப்படும் தியானத்தின் போது பிரபஞ்ச ஆற்றலின் சக்தி மும்மடங்கு அதிகரிக்கும். நாம் அதை தவற விடாமல் கண்டிப்பாக பயன் புடுத்திக் கொள்ள வேண்டும்.
6. பிரமிட் சக்தியை தியானத்திற்கு பயன்படுத்த வேண்டும். பிரமிட் என்பது ஒரு அற்புதமான வடிவமைப்பாகும் இதன் தங்கக் கோணம் பொருள்களின் ஆற்றலை தக்க வைப்பதோடு அதிகரிக்கவும் செய்கிறது என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இந்த அமைப்பில் குறிப்பாக அரச அறை எனக் கூறப்படும் பகுதியில் அடுத்த பரிமாணங்களில் உள்ள உலகங்களுக்கான வாசல்கள் திறக்கப்படும் அளவிற்கு சக்தி பிரவாகம் உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதனடியில் இருந்து செய்யப்படும் தியானத்தின் ஆற்றல் மும்மடங்கு அதிகரிக்கும்.
Comments