இந்தக் கேள்வியை ஒரு முறையாவது கேட்க தோன்றாத மனிதர்கள் இருப்பது அரிதானது. அனைவரும் ஏதோ ஒரு சமயத்தில் வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் கேள்வியை சந்தித்திருப்போம். இதற்கான பதில்களை பல்வேறு குருமார்களும் ,மதவாதிகளும் , மகான்களும் அவர்களின் புரிதல்களுக்கேற்ப கூறினாலும் முழுமையான விளக்கம் என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. மின்சாரத்தின் செயல்பாடுகளை பார்க்கும் நம்மால் அதனை பார்க்க முடிவதில்லை. அதுபோல உயிர் உள்ள உயிரினங்களின் செயல்களைக் காண முடிந்த நம்மால் அந்த உயிரைக் காண முடிவதில்லை.
கடவுளின் புரிதலும் ஏறக்குறைய இந்த நிலையிலேயே தான் உள்ளது. ஒஷோ இந்த இயக்கத்தை இது உயிரற்ற பொருள்களில் உறக்கமாக இருக்கிறது என்றும், உயிர் உள்ள பொருள்களில் உணர்வாக இருக்கிறது என்கிறார். அதைத்தான் அனைத்து ஞானமடைந்த மகான்களும் கடவுளை உனக்குள்ளே தேடுங்கள் என்கின்றனர். ஹெய்சென்பர்க் என்ற ஒரு ஜெர்மன் விஞ்ஞானியின் நிலையாமைத் தத்துவக் கோட்பாடு இந்த பிரபஞ்ச இயக்கத்தின் நிலைகளை ஓரளவிற்கு விளக்க கூடியதாக உள்ளது.
அவர் ஒவ்வோரு அணுவில் உள்ள மூலக் கூறுகளும் ஒரு சமயம் பொருளாகவும் மற்றொரு சமயம் அலையாகவும் சில சமயம் பொருளாகவும் , அலையாகவும் இன்னொரு சமயத்தில் ஒன்றுமில்லா வெறுமையாகவும் இருக்கிறது என்கிறார். ஒவ்வோரு அணுவுமே கடவுளின் நிலையையே பிரதிபலிக்கின்றன. கடவுளின் நிலையற்ற தன்மையும் அதுவே தான். இதுவே மனிதனுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என ஓஷோ கூறுகிறார்.
ஆத்திகர்கள் மற்றும் யோகிகள் அந்த இறை ஆற்றலை பக்தி அல்லது தியானம் மூலம் அலைகளாக பெறுகின்றனர். புத்தர் அதன் வெறுமையை உணர்ந்தார். நாத்திகர்கள் அதன் பொருள் மற்றும் பொருளற்ற தன்மையில் சிக்குண்டு விடை காண முடியாமல் எந்த முடிவுக்கு வருவதென்று தெரியாமல் உள்ளனர். இறை ஆற்றலை ஒரு வரையறைக்குள் கொண்டு வர முயல்வது இயலாத காரியம்.
உடலின் DNA குறித்த ஆராய்ச்சியானது நம்மை கடவுளுக்கு மிக அருகில் கொண்டு சென்றதாக கூறிய விஞ்ஞானிகளும் அது மீண்டும் தன் பதிவுகளை மாற்றுவது அறிந்து அதை முழுமையாக ஒரு வரையறைக்குள் கொண்டு வர முடியாமல் திகைக்கின்றனர். நமது உடல் மட்டுமல்ல எண்ணங்களில் கூட ஒரு நிலைத் தன்மை இருப்பதில்லை. மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்றால் கடவுளின் நிலையும் இதுவே.
ஏனென்றால் கடவுளை காலத்தால் வரையறுக்க முடியாது. அவர் கடந்த காலத்திற்கோ , எதிர் காலத்திற்கோ சொந்தமானவர் அல்ல . அவர் என்றும் நிகழ்காலத்தில் மட்டுமே நிகழந்துக் கொண்டிருக்கும் நிகழ்வாகத்தான் நாம் உணர முடியும். அதுவே இந்த நிலையற்ற தன்மைக்கும் ஆதாரமாகிறது. அவரை அறிய நாமும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டியுள்ளது. தியானத்தில் நம் மூச்சை நாம் கவனிக்கும் போது நிகழ்கணத்தில் வாழ்ந்து இறைத்தன்மையை உணரும் வாய்ப்பைப் பெற்று பிரபஞ்ச சத்தியத்தை சிறிதளவாவது உணரலாம்.
Comments