எண்ணங்களின் வலிமையை குறித்து பல்வேறு விஷயங்களை கேள்விப் பட்டிருப்போம். எண்ணங்கள் மூன்று வகையாக உருவாகின்றன. தன்னிச்சையான எண்ணங்கள், அனிச்சையான எண்ணங்கள், தன்னுணர்வுடன் கூடிய எண்ணங்கள் . எண்ணங்களின் தொடர்ச்சியாக வார்த்தைகளும் அவ்வாறே மூன்று நிலைகளில் உருவாகின்றது. இதன் வரிசையில் செயல்களும் உருவாகின்றது. தானாகவே உருவாகும் செயல்கள் தானாகவே நடைபெறும் . ஆனால் நீங்களாகவே செய்யும் செயல்களினால் தன்னிச்சையான செயல்கள் பாதிக்கப்படுகின்றன.
எளிதாக கூறினால் உடல் தன்னிச்சையாக சுவாசிக்கிறது, உணவைச் செரித்து சத்துக்களாக பிரித்து கழிவுகளை வெளியேற்றுகிறது, இருதயம் துடிக்கிறது, நோய் எதிர்க்கும் சக்தியையும் உருவாக்கி கொள்கிறது. நாம் தானாக செய்யும் செயல்களான ஆரோக்கியமற்ற உணவை உண்ணுதல் , தூய்மையற்ற காற்றை சுவாசித்தல், உடலை சீர் செய்வதாக கூறி உட்கொள்ளும் பக்க விளைவுகள் உள்ள மருந்துகளினாலும் தான் உடல் பாதிப்படைகிறது.
பிரபஞ்சத்தின் அனைத்து செயல்களும் தானாக மிகச் சரியாகவே செயல்படுகிறது. ஆனால் நாம் தான் இந்த நிகழ்வுகளிலும் உள்ள காரண காரிய விதிகள் புரியாமல் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம். குழந்தை வயிற்றில் இருக்கும் போது அனைத்தும் தன்னிச்சையாக நிகழ்கிறது. பிறந்தவுடனும் உடலுக்கான இயற்கையான ஞானத்தை நாம் புரிந்து கொள்வதில்லைை. இதை எப்படி புரிந்து கொள்வது ? இந்த புரிதலின் மூலம் உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்கு முதலில் இதன் அடிப்படை வேர் காரணத்தை அறிவது மிக முக்கியம். செயல்களின் உருவாக்கத்திற்கு முன் அது வார்த்தைகளாக வெளிப்படுகிறது . வார்த்தைகளாக வெளிவருமுன் அவைகள் எண்ணங்களாக உருவாகிறது. எண்ணங்களே உண்மையில் பிரபஞ்சம் புரிந்துக் கொள்ளும் அலைவரிசையில் உள்ளது.
நாம் மாற்ற வேண்டியது முதலில் எண்ணங்களைத்தான். நாம் மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை சிந்தித்துக் கொண்டே இருந்தாலோ அல்லது இது எனக்கு வேண்டும் என சங்கல்பத்தை உருவாக்கினாலோ அதன் தீவிரத்தால் கண்டிப்பாக நாம் நினைத்ததை அடைவது சாத்தியமே. எண்ணங்கள் சொல்லாக மாறி பின் செயலாகவும் மாறி பலன்களை தரும். இதில் நம் சிந்தனை சரியானதா என்பதை புரிந்துக் கொள்வது தான் முக்கியமானது .எண்ணங்கள் உருவாவது மனதின் மூலமே என்பதால் மனதின் அலைகளை ஒழுங்கு படுத்த வேண்டி உள்ளது.
மனதின் இயல்பு நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு நிமிடத்தில் எண்ணற்ற முறை தாவிக் கொண்டே இருக்கும். அதன் இயல்பை புரிந்துக் கொண்டு நாம் அதற்கு அதிகாரியாவதற்கு தியானத்தைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. தியானத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் மனம் கட்டுக்குள் வரும். சீரமைக்கப்பட்ட மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு வலிமை அதிகமாக இருப்பதால் நாம் எண்ணுவதை உருவாக்கும் சக்தி நம்முள் உண்டாகும் பிரபஞ்ச சக்தி அதற்கான முழு ஆற்றலையும் தரும் என்பது திண்ணம். ஏனெனில் வாஸ்தவத்தில் பிரபஞ்சம் என்பது நாம் முழு மனதோடு கேட்கும் எந்த விஷயத்தையும் நிச்சயமாக தரும் ஒரு கற்பக விருக்ஷமே.
Comments