பிரபஞ்சம் சூன்யத்தின் ஆழத்தில் இருந்தே உருவானது என அறிவியல் கூறுகிறது. ஆன்மிகவாதிகளும் பிரபஞ்சத்தின் மொழி மவுனமே என்று கூறுகின்றனர். ஒன்றுமற்ற தன்மையில் இருந்தே அனைத்தும் உருவானதினால் தான் இறைவன் ஆதி அந்தம் அற்றவன் . இதனை மகான்கள் தங்கள் வுழிப்புணர்வின் மூலம் அறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். மவுனம் தொடக்கமாக இருந்தாலும் தறபொழுது தொடர்புக்கொள்ள மொழி என்ற ஒன்றை கண்டறிந்த பின்னர் மவுனமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன. அல்லது ஏன் மவுனமாக இருக்க வேண்டும் .அதனால் விளையும் நன்மைகள் தான் என்ன . ஒரு வேளை இதன் விடையறிந்தால் நாம் மவுனத்தை கடைபிடிக்கலாம் என பெரும்பாலானோர் கருதலாம்.
மவுனத்தை முதலில் இடைக்கிடை மவுனமாக பயிற்சி செய்யலாம். அதாவது தேவைக்கு மட்டுமே பேசுவது அப்பொழுது தான் நாம் எவ்வளவு தேவையில்லாமல் பேசிக் கொண்டே இருந்தோம் என்பதை முதன்முதலாக உணர ஆரம்பிப்போம். மேலும் ஆற்றல் சேமிக்கப்படுவதால் ஒரு புத்துணர்வும் உண்டாகும். அடுத்ததாக அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிடாத தன்மை உருவாகும். இது நமக்கு மிகப் பெரிய மன அமைதியை கொடுக்கிறது. மவுனமாக இருக்கும் பொழுது மின்னணுக் கருவியான அலைபேசி பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். தொலைக் காட்சி பார்ப்பதையும் நிறுத்தும் போது மட்டுமே சிறிதளவாவது மவுனத்தின் பலன் கிட்டும்.
இது சாத்தியமா என்றால் சாத்தியமே . இவைகள் எதுவும் கண்டுபிடிக்காத காலத்திலும் மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டு தான் இருந்தார்கள். உண்மையில் நாம் பிறருடன் பேச விரும்புவதற்கும் , பொழுதை போக்குவதற்காக பல மின்னணுச் சாதனங்களின் மேல் சார்ந்திருப்பதற்கான காரணம் நாம் தனிமையைக் கண்டு அஞ்சுவதனால்தான். பசித்திரு ,தனித்திரு, விழித்திரு என்றார் வள்ளலார். தனிமை நம்மை மவுனமாக்கும் மவுனம் நம்மை தனிமைப் படுத்தும். இதன் பலன் என்னவென்றால் நம்மை நாம் முதன் முதலாக கவனிக்க தொடங்குவோம். இது வரை பிறரை மட்டுமே கவனித்த நாம் நம்மை புரிந்துக் கொள்வதற்கான முதல் அடி எடுத்து வைப்பது இந்த மவுனத்தின் மூலம் தான்.
இதைத் தான் தியானத்தில் கண்களை மூடி அமர்ந்து வெளி உலகத்தின் தொடர்புகளில் இருந்து விடுபட நமது சுவாசத்தை கவனிக்க சொல்கின்றனர். இதன் மூலம் சிறிது சிறிதாக நம் மனவோட்டம் குறைக்கப்படும்போது நாம் புதிதாக நம் அகக் குரலை கேட்க தொடங்குவோம். அதுவே பிரபஞ்சத்தின் குரல் . அது எப்பொழுதும் ஒலித்துக் கொண்டுதான் உள்ளது ஆனால் இப்போது தான் அதைக் கேட்கக்கூடிய வகையில் நாம் இருக்கிறோம். மேலும் பிரபஞ்சத்தின் ஆற்றலும் நம்முள்ளே பாய்வதை உணர்கிறோம். வாழ்க்கைக்கு தேவையான எது சரி? எது தவறு? என்பது தன் ஒழுக்கமாக உணரப்படுகிறது.
இனிக் கண்களைத் திறந்து இருந்தாலும் பிறர் கூறுவதை முதலில் கேட்டு தேவையிருந்தால் மட்டுமே பேசும் பழக்கம் தானாகவே உருவாகும். மறை நூல்களில் மகான்கள் கூறிய மறைபொருள்களின் உண்மையான விளக்கத்தை அறியும் சக்தியும் தோன்றும். கடைசி சத்தியமான செயல்கள் புரிவதன் வழியே செயலற்ற தன்மைக்கு செல்லும் மார்க்கமும், மொழிகளின் மூலமே ஓசையைக் கடந்து பிரபஞ்ச மொழியான மவுனத்தை கேட்கும் திறனும், மனதின் மூலமே மனமற்ற தன்மைக்கு சென்று முழு விழிப்புணர்வு பெறவும் மவுனமும் தியானமும் உதவுவதை புரிந்துக் கொள்வோம்.
Commentaires