இந்த தலைமுறை பெற்றோர்கள் குழந்தைகளை மேற்பார்வை செய்து அதிகார மனோபாவத்தில் , கட்டுபடுத்தி வளர்ப்பதே சரியான அணுகுமுறை என நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான போக்காகும். முதலில் நம்மை நாம் கட்டுபடுத்தி கொள்ள பயில வேண்டும்.யாரையும் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரமோ, அவசியமோ நமக்கு இல்லை. கலீல் ஜிப்ரான் அவரது தீர்க்கதரிசி என்ற புத்தகத்தில் மிக அழகாக கூறுகிறார்”உங்களது குழந்தைகள் உங்களிடமிருந்து வந்தவர்கள் அல்ல. உங்கள் மூலமாக வந்தவர்களே”நீங்கள் நினைக்கலாம் நீங்கள் தான் அவர்கள் இங்கு பிறப்பதற்கு காரணம் என்று அது உண்மையல்ல.
அவர்கள் உங்கள் மூலமாக வருகிறார்களேே தவிர உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களை தேர்ந்தெடுத்து இங்கு பிறக்கின்றனர். பிறப்பு என்பதன் பொருள் குறித்து முதலில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.அவர்கள் இங்கு வருவதற்கு முன் வேறு உயரிய உலகங்களில் முதிர்ச்சி அடைந்த ஆன்மாக்களாக இருந்து அடுத்த பிறவி எடுப்பதற்காகவே இங்கு வருகிறார்கள்.அவர்கள் வெறும் குழந்தைகள் அல்ல.அவர்கள் முழுமை பெற்ற ஆன்மாக்களாக இருந்தாலும் மேலும் அனுபவங்களைப் பெற்று கற்பதற்காக இளவயது உடலை தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.
ஆன்மிக அறிவியல் பற்றி அறியாதவர்கள் ஆன்மிக பெற்றோர்களாக இருக்க இயலாது. ஆன்மிகத்தின் அடிப்படையை புரியாதவர்களுக்கு இதை புரிந்துக் கொள்வது கடினமே. ஆன்மிகப் பெற்றோருக்கும் ஆன்மிக தன்மையற்ற பெற்றோருக்கும். மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. இது கண்டிப்பாக அவர்களின் குழ்தை வளர்ப்பில் வெளிப்படும். ஆன்மிகத்தின் பால பாடமான தலையிடாமல் இருத்தல் அவர்களுக்கு புரிவதில்லை. நாம் அவர்களுக்கு வழி காட்டலாம் அல்லது சரியான வாழ்க்கை முறையை வாழ்ந்துக் காட்டலாம் . இது மிகவும் நல்லது எனினும் தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமை.
ஆன்மிகத்தை அறியாத அல்லது புரியாத பெற்றோர்களின் இல்லம் என்றும் வலி, வேதனைகள், குழப்பங்கள்,தலையீடுகள் மற்றும் புரிதல்கள் இல்லாதவைகளாகவே இருக்கும். ஆன்மிகத்தை கைகொண்டு தியானம் செய்பவர்களின் இல்லமானது மகிழ்ச்சி, ஆனந்தம் மற்றும் புரிதல்களோடு சொர்க்கமாக இருக்கும்.நாம் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நமது கைகளில் தான் உள்ளது.
Comments