ஆன்மிகத்தை புரிந்துக் கொள்ளும் முதல் படியான தியானத்திலேயே மாறாத கடந்த காலமோ , தெரிந்துக் கொள்ள முடியாத எதிர் காலமோ இருப்பதில்லை. என்றும் எப்போழுதும் கணிக்க முடியாத நிகழ்காலமே வலியுறுத்தப்படுகிறது.
நிகழ்காலம் அவரவர் தன்மைக்கு மற்றும் நிலைக்கு ஏற்ப மாறக் கூடியது. பிரபஞ்ச இருப்பானது அனைத்தையும் உள்ளடக்கியது. ஆதி அந்தம் இல்லாதது . இருப்பினும் தோன்றியது மகா சூன்யத்தில் இருந்தே அல்லவா?இதுவே முதல் முரண்பாடு.
சூன்யத்தில் இருந்தே அனைத்து உருவாக்கமும் நிகழ்ந்துள்ளது என்பதை அறிவியலாளர்களும் ஒப்புக் கொள்ளுகின்றனர்.
எண்ணங்களின் வலிமையால் எதையும் உருவாக்கலாம் எனக்கூறப்படும் அதே நேரத்தில், அந்த உருவாக்கத்தின் விளைவுகளையும் நீங்களே அனுபவிக்க வேண்டும் என்பது பிரபஞ்சத்தின் மாறாத விதியாகவும் உள்ளது
நம் கர்ம பலனான விதியை மதியால் வெல்லலாம் என்பர். மதி என்பது நமது வினைப்பயன்களை தியானம் மூலம் அறிந்துக் கொள்ளுதலே. எனினும் நம் சுய சதந்திரமானது நமது ஒரு காலை தூக்குவது போன்றதே.
மற்றொரு காலானது கர்மப் பலன்களால் கட்டப்பட்டுள்ளது என்று ஓஷோ அழகாக கூறுவார். விடுதலையடையலாம் ஆனால் அதில் கட்டுண்டும் இருக்க வேண்டியுள்ளது.
அனைவரும் மோட்சம் என்பதை அடைந்தே தீருவர் அதில் சந்தேகமில்லை. எனினும் அனைவரும் ஒரே சமயத்தில் வீடுபேறை அடைவது சாத்தியமில்லை.
அனைவரும் மாபெரும் பிரபஞ்ச சக்தியின் துகள்களே, வேறுபாடுகள் இல்லை . அனைவரும் தனித்துவம் வாய்ந்தவர்களே என்பது சத்தியமே . இருப்பினும் அனைவரின் புரிதல்களும் ஒன்று போல இருப்பதில்லை.
அனைவரும் சென்றடைய நினைக்கும் இலக்கு ஒன்றாகவே இருந்தாலும் அவரவர் பாதைகளும் வெவ்வேறே. அனைத்தையும் அறிந்துக் கொள்ளவே இந்த பூமிக்கு வந்துள்ளோம். இருப்பினும் அனைத்தையும் அறிந்துக் கொள்வது சாத்தியமல்ல.
பிரபஞ்சத்தில் தெரிவது, புரிவது, உணர்வது எனப் பலநிலைகள் உள்ளன. பிரபஞ்சம் எல்லையற்றது எனில் , நமது புரிதல்கள் ஒரு எல்லைக்குட்பட்டே உள்ளது .
எனவே இவ்வாறாக உள்ளது என்பதை உணர்ந்த உயர்ந்த நிலைகளில் உள்ள ஞானிகளும் எட்ட முடியாத விஷயங்கள் என்றும் பிரபஞ்சத்தில் உள்ளது. நாம் தியானம் செய்து பல விஷயங்களை புரிந்துக் கொள்ளலாம். ஆனால் அனைத்தையும் அல்ல.
உடலும் புனிதமே அதனால் உடலை ஆலயமாக தேர்ந்தெடுத்து ஆன்மா பூமிக்கு வருகிறது. மனமும் புனிதமே அதன் மூலமே நான் என்ற அகந்தை உருவாகி பின்னர் நான் யார் என்பதையும் அறிய முடிகிறது.
அறிவும் புனிதமே அதன் மூலமே நாம் அனைத்து கோட்பாடுகளை அறிகிறோம் . பின்னர் அதன் வழியே வரும் அனுபவங்கள் மூலம் ஞானத்தை அடைகிறோம்.
இறைத்தன்மையின் படைப்பில் அனைத்திற்கும் இடமுண்டு பலன்களுமுண்டு. எனினும் உடல், மனம் அறிவு மற்றும் ஞானமும் ் அனைத்து உணர்வுகளும் நம்மை விட்டு நீங்கிய நிலையிலேயே தான் நாம் இறுதி நிலையான முக்தி அடைய முடியும் என்று மகான்கள் கூறுகின்றனர்.
எனவே அனைத்தும் தேவையே எனினும் அனைத்தையும் கை விடவும் வேண்டும். இன்னும் இன்னும் என ஆன்மிக முரண்பாடுகளை நாம் ஆழ்ந்து செல்ல செல்ல உணர முடியும் .
அனைத்தையும் இணைத்து உள்ளடக்கியதல்லவா இப்பிரபஞ்ச அற்புதம். இவையெற்றை எல்லாம் தியானம் செய்து நாம் அறிந்துக் கொள்வோம்.
Comments